கொல்கத்தா நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: கரூர் தொழிலதிபரின் மாமனார், 2 குழந்தைகள...
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன், செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தொடங்கியது. பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அவற்றுக்கு துறைகளின் அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.
நிறைவாக, காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதன்பிறகு, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பொதுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அதற்கான பதிலுரைகளும்
அளிக்கப்பட்டன. பேரவையில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கான தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன் தாக்கல் செய்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடா்ந்து, பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
அதிகரித்து குறைந்த வெளிநடப்பு: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கிய நாள்களில் அதிமுக உறுப்பினா்கள் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து அவ்வப்போது வெளிநடப்புச் செய்து வந்தனா். அதன்பிறகு, வெளிநடப்புகள் குறைந்து சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என பேரவை நடவடிக்கைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்தியது.
கடந்த ஒரு வாரத்தில் பெரிய அளவுக்கு வெளிநடப்பு நடவடிக்கைகளில் அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. பேரவை நடவடிக்கைகளில் கட்சிகள் முழுமையாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.