தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொன்ன நிலையில், தான் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.
வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.
அப்போது, உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியல் குறித்து யாருமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்த நிலையில், தான் கொடுத்த பிரமாணப் பத்திரத்துக்கான உறுதிப்படுத்தும் ரசீதையும், பிரமாணப் பத்திரத்தின் நகலையும் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, வாக்குத் திருட்டுப் புகார் அளிப்பவர்கள், அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரியிருந்த நிலையிலும் யாரும் தாக்கல் செய்யவில்லை என்று ஞானேஷ்குமார் கூறியிருந்த நிலையில், அது உண்மையில்லை என்று அகிலேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெற்றதற்காக மின்னஞ்சலில் ரசீதையும் வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக 18 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.