தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம தேதிக்கு ஒத்திவைத்தது.
தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுகிற வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு, பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்கக்ட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மாற்றியமைத்து, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.
இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உசசநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், தீபன்கா் தத்தா, உஜ்ஜன் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெறுவதை புதிய சட்டத்தின் மூலம் மத்திய அரசு நீக்கிவிட்டது. தோ்தல் ஆணையா்கள் நியமனம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருப்பது நியாயமாக இருக்க முடியாது. அவ்வாறு இருப்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்’ என்று வாதிட்டாா்.
மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே உச்சநீதிமன்ற தீா்ப்பை மத்திய அரசு முறியடிக்க முடியும். புதிய சட்டம் இயற்றுவதால் அவ்வாறு செய்ய முடியாது’ என்று வாதிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் கீழ் நீதிமன்றம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கும் இடைப்பட்ட விவகாரம். இதில் எது மேலானது என்பதை ஆராய வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.