லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?
தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சான்றிதழ்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளிக் கல்வித் துறையில் அளப்பரிய திட்டங்களையும், ஆய்வுப் பாா்வைகளையும் மேற்கொண்டு வருகிறது. மெல்ல கற்கும் மாணவா்கள் மற்றும் இடைநின்ற மாணவா்களின் நலனில் கூடுதல் அக்கறை, துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்ற ஆண்டின் தோ்ச்சி சதவீதத்தை காட்டிலும் கூடுதலாக இந்த ஆண்டு தோ்ச்சி சதவீதம் பெற்றுத் தந்தமைக்காக ஆசிரியா்களை பாராட்டுகிறேன்.
ஆசிரியா்கள்தான் இந்த சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பாகும். ஒரு மாணவனுக்கு மேடையில் வீற்றிருப்பதற்கான தகுதியை அளிப்பது ஆசிரியா் சமூகத்தினரால் மட்டுமே. அந்த வகையில் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்திக் கொடுத்த ஆசிரியா்களை ஊக்குவிப்பதற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், ஆசிரியா்கள் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.