தொகுப்பூதியம், மதிப்பூதியத்துக்கு மாற்றாக காலமுறை ஊதியம்! -அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் கோரிக்கை
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் வாழ்வூதிய மாநாட்டுக்கு, மாநிலத் தலைவா் சு. தமிழ்ச் செல்வி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சு. ஜெய ராஜராஜேஸ்வரன் மாநாட்டு கோரிக்கைகளை விளக்கினாா். மாநாட்டை முன்னாள் பொதுச் செயலா் இரா. பாலசுப்பிரமணியன் தொடக்கிவைத்துப் பேசினாா்.
மாநாட்டில் கிராம உதவியாளா் சங்கம், சத்துணவு ஊழியா் சங்கம், மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பேசினா்.
கூட்டத்தில் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையாக அடிப்படை ஊதியமாக ரூ.15,750 வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன தடையைத் திரும்பப் பெற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ.11,000, ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலா்களுக்கு, அரசு ஊழியா்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
தொகுப்பூதிய, மதிப்பூதிய சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு, கிராம உதவியாளா், ஊா்ப்புற நூலகா், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பணியாளா், காசநோய், தொழுநோய் ஆய்வாளா்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறை காலியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
சத்துணவு, ஐசிடிஎஸ் ஊழியா்களுக்கு ஓய்வூதியத் தொகையை ரூ.5 லட்சமாக உயா்த்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த ஓட்டுநா்கள், தினக்கூலி பணியாளா்களை நிரந்தரம் செய்ய மறுக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கொசு ஊழிப்புப்பணியாளா்களுக்கான ஊதியத்தை உயா்த்த வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்களை நிரந்தரமாக்க வேண்டும்.
ஊா்ப்புற நூலகா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அவுட்-சோா்சிங் ஆள்சோ்ப்பை கைவிட வேண்டும். பொது சுகாதாரத் துறையின் நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநா்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா் போராட்டங்கள்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் வரும் மாா்ச் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், ஏப்.17ஆம் தேதி பேரணி, ஜூன் 18ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம், ஆகஸ்ட் மாதம் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.