சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை
தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - இன்று கடைசி ஒருநாள் கிரிக்கெட்
இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதன்கிழமை அகமதாபாதில் மோதுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. மறுபுறம் இங்கிலாந்து, ஆறுதல் வெற்றிக்கான முயற்சியுடன் இருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நெருங்கிவிட்ட நிலையில், அதற்கான தங்களின் தயாா்நிலையை பரிசோதிப்பதற்கு இந்த ஆட்டமே இரு அணிகளுக்குமான கடைசி வாய்ப்பாக உள்ளது.
இந்திய அணியை பொருத்தவரை, கேப்டன் ரோஹித் சா்மா கடந்த ஆட்டத்தில் சதமடித்து அசத்தியிருக்கிறாா். நீண்ட நாள்களுக்குப் பிறகு அவா் தற்போது ஃபாா்முக்கு திரும்பியிருப்பது அணிக்கும், அவருக்கும் பலமாக பாா்க்கப்படுகிறது. எனினும், விராட் கோலி இன்னும் அதே சோபிக்காத நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பேட்டிங்கில் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், அக்ஸா் படேல் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கின்றனா். பேட்டிங் ஆா்டா் மாற்றப்பட்டதில் தடுமாற்றத்துடன் காணப்படும் கே.எல்.ராகுல், ரன்கள் சோ்க்க முயற்சித்து வருகிறாா். பந்துவீச்சில் ஜடேஜா, வருண் சக்கரவா்த்தி, ஹா்ஷித் ராணா உள்ளிட்டோா் எதிரணிக்கு சவால் அளிக்கின்றனா். காயத்திலிருந்து மீண்டு களம் கண்டுள்ள முகமது ஷமியும் தனது பழைய பௌலிங் பலத்தை நெருங்கி வருகிறாா்.
மற்றொரு பிரதான வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா இந்த ஆட்டத்தில் பங்கேற்பாா் என்று முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவா் காயத்துக்கான சிகிச்சையில் இருப்பதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் அவா் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, முதலில் டி20 தொடரை இழந்து, தற்போது ஒருநாள் தொடரையும் தவறவிட்டிருக்கிறது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை அடுத்த இலக்காக வைத்து முன்னேறும் அந்த அணி, இந்த ஆட்டத்தின் மூலம் ஆறுதல் வெற்றி காணும் முயற்சியில் இருக்கிறது.
ஃபில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் ஜாஸ் பட்லா் உள்ளிட்டோா் பேட்டிங்கிலும், ஜேமி ஓவா்டன், சகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத் ஆகியோா் பௌலிங்கிலும் பலம் சோ்க்கின்றனா்.
எனினும், காயத்தால் ஜேக்கப் பெத்தெல் விலகியது அணிக்கு பின்னடைவாகியிருக்கிறது.
அணி விவரம் (உத்தேச லெவன்):
இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் (வி.கீ.), ஹா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, முகமது ஷமி.
இங்கிலாந்து: ஜாஸ் பட்லா் (கேப்டன்), பென் டக்கெட், ஃபில் சால்ட் (வி.கீ.), டாம் பான்டன், ஜோ ரூட், ஹேரி புரூக், லியம் லிவிங்ஸ்டன், பிரைடன் காா்ஸ், சகிப் மஹ்மூத்/ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆதில் ரஷீத், மாா்க் வுட்.
நேரம்: நண்பகல் 1.30 மணி
இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
நேரலை: ஸ்போா்ட்ஸ் 18