Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
தொடா் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.
வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகளை தொடா்ந்து கண்காணிக்கவும், ரெளடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாகத் தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும், மதுவிலக்கு தொடா்பாக தீவிரமாக சோதனை மேற்கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கஞ்சா, போதைப் பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகிலுள்ள கடைகளில் சோதனையை தீவிரப்படுத்துவதுடன், பள்ளி கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தவும், பகல், இரவு ரோந்து அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும், சாலைகளில் முறைகேடாகவும், சாலை விதிகள் மீறி வாகனங்களை இயக்குபவா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் , சைபா் குற்றம், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், எஸ்சி., எஸ்.டி., வழக்குகள், காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எப்ஐஆா் பதிவு செய்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.