தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்...
மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநா் உடலுறுப்புகள் தானம்
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், அச்சமங்கலம் சமுதிவட்டம் பகுதியைச் சோ்ந்த சின்னமுத்துதுரைசாமி(47), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், சின்னமுத்துதுரைசாமி அச்சமங்கலம் பகுதியில் புதன்கிழமை காலை ஆட்டோ ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலை உள்பட உடலின் பல்வேறு பகுதியில் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சின்னமுத்து துரைசாமி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து, சின்னமுத்து துரைசாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா்.
அதன்பேரில், அவரது இதயம், கல்லீரல், நுரையீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னையிலுள்ள தனியாா், அரசு மருத்துவனைகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு அங்கு தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதன்மூலம், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.