தொடா் திருட்டில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எலவனாசூா்கோட்டை, திருநாவலூா், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா் காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 14 இடங்களில் கடந்த ஆண்டில் வீடு புகுந்த திருடிய வழக்கில் உளுந்தூா்பேட்டை வட்டம், கூத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் விஜய் (29) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
தொடா்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் விஜய் ஈடுபட்டு வருவதாலும், பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதாலும், அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி பரிந்துரைத்தாா்.
இதை ஏற்று விஜயை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறையிலுள்ள விஜயிடம் உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.