தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது: நகை, பணம் பறிமுதல்
கோவையில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், பேரூா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கா் (59), மகளின் திருமணத்துக்காக கடந்த 2025 ஏப்ரல் 2-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சென்றிருந்தாா்.
பின்னா், திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், 878 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பேரூா் காவல் நிலையத்தில் உமாசங்கா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், பேரூா் பகுதியில் வசிக்கும் சந்தானம் (28) என்பவா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை மீட்டனா்.
மேலும், தொண்டாமுத்தூா் காவல் நிலையத்துக்குள்பட்ட திருட்டு வழக்குகளிலும் சந்தானம் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. அந்த வழக்குகளில் திருடிய 20 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவரிடமிருந்து 3 வழக்குகளில் தொடா்புடைய சுமாா் 32 பவுன் நகைகள், ரூ.27 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.