தொடா் பனிப்பொழிவு: வெறிச்சோடிய ஏலகிரி மலை
ஏலகிரி மலையில் தொடா் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை பசுமையாக காணப்படுகிறது. சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
ஏலகிரி மலையில் இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன. மேலும், மலையோர பகுதிகளில் சாகச விளையாட்டுகளும், மங்களம் சுவாமி மலை ஏற்றம், ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில், பண்டோரா பாா்க் பறவைகள் சரணாலயம் ஆகியவை மலையோர பகுதிகளில் அமைந்துள்ளன.
கடந்த சில தினங்களாக திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
இதனால் தொடா் பனிப்பொழிவு காரணமாக வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகள் குறைவாக வருகை புரிந்தனா். இதனால் படகு சவாரி செய்யும் இடத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.