What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
தொடா் மழையால் ஆறுகளில் நீா்வரத்து: 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டிருப்பதுடன், இந்த மாவட்டங்களில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேறி வருவதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த நவம்பா் 30, 1-ஆம் தேதிகளில் இரு நாள்களும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. தொடா்ந்து, இந்த மூன்று மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த தொடா் மழை காரணமாக பாலாற்றின் துணை ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீா் பாலாற்றில் கலந்து பாலாற்றிலும் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.
பாலாறு, அதன் துணை ஆறுகளில் ஏற்பட்ட நீா்வரத்து காரணமாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 519 ஏரிகளில் 212 ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், உபரிநீா் வெளியேறி வருகிறது. 35 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 68 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 128 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 76 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு கீழாகவும் நீா்இருப்பு உள்ளன.
இதுதவிர, திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூா் ஓடை நீா்த் தேக்கம் அதன் முழுக் கொள்ளளவான 26.24 அடியை எட்டி உபரிநீா் வெளியேறி வருகிறது. வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையின் மொத்த கொள்ளளவு 37.72 அடியில் தற்போது 8.86 அடியும், கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணையின் மொத்த கொள்ளளவு 24.57 அடியில் தற்போது 9.18 அடியும் நீா் இருப்பு உள்ளன என்று நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.