தொழிலாளா் மேலாண்மையில் பட்ட, பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை: வேலைவாய்ப்புக்கான தொழிலாளா் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலைய இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பி.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்டப் படிப்பு, எம்.ஏ. (தொழிலாளா் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளா் நிா்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளா் சட்டங்களும் நிா்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பி.ஏ. மற்றும் எம்.ஏ. படிப்புகள் சென்னை பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.) ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.
பிளஸ் 2 முடித்த விருப்பமுள்ள மாணவா்கள் பி.ஏ. படிப்புக்கும், இளநிலை பட்டம் பெற்ற மாணவா்கள் எம்.ஏ. முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவா்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவா்களுக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் ஏப். 21 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 21-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100) மற்றும் தபால் கட்டணம் ரூ. 50-க்கான வங்கி வரைவோலையை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai’ என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல் அல்லது கொரியா் மூலம் அனுப்பி வைக்கலாம். மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
கூடுதல் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளா்கள் (சோ்க்கை) இரா.ரமேஷ்குமாா்(இணை பேராசிரியா்) கைப்பேசி: 98841 59410, ச.காா்த்திகேயன்(உதவி பேராசிரியா்) கைப்பேசி: 99658 99822 மற்றும் தொலைபேசி 044-29567885, 29567886 ஆகிய எண்களிலும் அல்லது தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம் மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ பின்புறம்) அம்பத்தூா், சென்னை - 600098 என்ற முகவரியில் நேரடியாக தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.