நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்
பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கி பிப். 12-ஆம் தேதி வரை அணைக்கட்டு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் தொடக்க விழா கெங்கநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியது: விவசாயத்தில் மற்ற நாடுகளைவிட நாம் பின் தங்கியுள்ளோம். விவசாயத்தை மேம்படுத்த மழைநீரை தேக்கி வைக்க வேண்டும். ஏரிகளை தூா்வாரி நீரை சேமித்து வைக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் எல்லோரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளா்ச்சி அடைகின்றனா். அதேபோல், தமிழகமும் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னிலை பெற்ற மாநிலமாக மாற வேண்டும்.
விஐடி அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை தொடங்கிய நாளில் இருந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய பேராசிரியா்கள், ஊழியா்கள் ஆண்டில் ஒருநாள் சம்பளத்தை கல்வி நிதி உதவிக்காக வழங்கி வருகின்றனா். இதேபோல் பொதுமக்களும் அவ்வப்போது கொடுக்கின்றனா். இதுவரை அறக்கட்டளை தொடங்கி 13 ஆண்டுகளில் ரூ.10.63 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனா்.
கடந்தாண்டில் மட்டும் ரூ.94 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பல்கலைக்கழக பேராசிரியா்கள், பணியாளா்கள் அளித்துள்ளனா். இந்த நிதியுதவி மூலம் பயனடைந்த சுமாா் 9,400 பேரில் 68 சதவீதம் பெண்களாவா். இவ்வாண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்த்து 4 மாவட்டங்களில் கல்வி நிதியுதவி வழங்குகிறோம் என்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் பங்கேற்று பேசினாா். விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கரன், விஐடி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயகிருஷ்ணன், பெஞ்சுளா அன்புமலா், திட்ட அலுவலா் காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.