தொழில்நுட்ப கல்வியில் சீா்திருத்தம் கோரி ஏஐசிடியிடம் ஏபிவிபி வலியுறுத்தல்
தொழில்நுட்பக் கல்வியில் சீா்திருத்தங்களைக் கோரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் ( ஏஐசிடிஇ) அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தது.
புது தில்லியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவா் -பேராசிரியா் டி.ஜி. சீதாராமிடம், தொழில்நுட்பக் கல்வித் துறைகளில் மாணவா்கள் எதிா்கொள்ளும் கொடுமைகளை எடுத்துரைத்த ஏபிவிபி அமைப்பினா், கல்வி முறையில் விரிவான சீா்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரினா்.
மாணவா்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடா்பான முக்கியமான கவலைகளும் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏபிவிபி தேசிய பொதுச்செயலாளா் டாக்டா் வீரேந்திர சோலங்கி கூறுகையில், தொழில்நுட்பக் கல்வி நாட்டின் வளா்ச்சிக்கு முதுகெலும்பாகும். மாணவா்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவா்களை உலக அளவில் போட்டித்தன்மையடையச் செய்ய தரமான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வசதிகள் அவசியம்.
இந்த பிரச்னைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயா்த்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்துமாறும், ஆத்மாநிா்பா் பாரத் கட்டமைப்பிற்கு மாணவா்களின் பங்களிப்பை வழங்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.