HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரம...
தொழில்பேட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்
தொழில்பேட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினாா்.
சிறுதொழில் வளா்ச்சிக் கழகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து, சென்னை சிட்கோ வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவா் பேசியதாவது: சிட்கோ தொழில்பேட்டைகளில் உள்ள காலி மனைகளை உடனடியாக தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் மனைகள் ஒதுக்கப்பட்டு, தொழில் தொடங்காத காலி மனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழில்பேட்டையில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். தொழில் மனைகளுக்கான தொகையை உரிய நேரத்தில் வசூல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பராமரிப்புக் கட்டணங்களை வசூலித்து தொழில்பேட்டைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.