தோப்புத்துறை அரசு மாதிரி பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 423 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
கடலூா் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தாா். தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலா் ரா. பேபி பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா்.
தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக தலைவா் என். கௌதமன், நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எம். சுல்தானுல் ஆரிஃபின், தலைமையாசிரியா்கள் சு. கவிநிலவன், அ. தமிழ்ச்செல்வன், அன்பழகன், இள. தொல்காப்பியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.