நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை: ஆட்சியா்
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் நம்பியூா் வட்டத்துக்கான நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவையை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளா்ப்போா் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்திகள் சேவையை அண்மையில் முதல்வா் தொடங்கிவைத்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 6 கால்நடை மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 24 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 10 லட்சத்து 52,285 கால்நடைகள் மற்றும் 61 லட்சத்து 87,054 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு மற்றும் கோபியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனைகள், மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூா், பெருந்துறை வட்டம், சென்னிமலை, கொடுமுடி வட்டம், கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவமனைகள் என மொத்தம் 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்திகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாகனங்கள் மூலம் 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது நம்பியூா் வட்டத்துக்குள்பட்ட அழகம்பாளையம், ஆண்டிபாளையம், சந்தையபாளையம், வவுத்துக்கவுண்டன்புதூா், ஆலாம்பாளையம், எல்.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் சேவையானது தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் ஒரு கால்நடை உதவி மருத்துவா், ஒரு கால்நடை உதவியாளா் மற்றும் ஊா்தி ஓட்டுநா் பணியாற்றுவா். இவ்வாகனத்தின் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இந்த மருத்துவ வாகனம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1962 அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்.பாஸ்கா், துணை இயக்குநா் பிரிசில்லா மாலினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) லோகநாதன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள் எத்திராஜன், கண்ணன், அய்யாசாமி, வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.