நயன்தாரா திருமணப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை இவ்வளவா?
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தின் ஓடிடி விற்பனை தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 திருமணம் செய்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் இந்தியளவில் கவனிக்கப்படும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது. இதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் நினைவுகளைப் பகிரும் காட்சிகளில் சில படங்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக, நானும் ரௌடிதான் படப்பிடிப்பின்போது காதலிக்கத் துவங்கியதால் அப்படத்தின் பாடல்களையும் சில காட்சிகளையும் ஆவணப்படத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதையும் படிக்க: ரூ. 100 கோடியை நெருங்கும் கங்குவா வசூல்!
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் காப்புரிமைக்கான ஒப்புதலை அளிக்காமல் மோசமான முறையில் நடந்துகொள்வதாக நடிகை நயன்தாரா இன்று அறிக்கையின் மூலம் கூறியிருக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நானும் ரௌடிதான் படத்தின் 3 விநாடி காட்சியைப் பயன்படுத்த நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்பதாகக் கூறியதுடன் ‘வாழு.. வாழவிடு’ என தனுஷ் பேசிய விடியோவையும் வெளியிட்டார். இதனால், பிரச்னை தீவிரமடைந்ததும் தற்போது அந்த விடியோவை நீக்கியுள்ளார்.
இந்தக் குழப்பங்களுக்கிடையே நயன்தாராவின் திருமணப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 80 கோடிக்குப் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவலைக் கேட்ட ரசிகர்கள், தனுஷுக்கு கொடுக்க வேண்டிய காப்புரிமைத் தொகையைக் கொடுப்பதில் நயன்தாராவுக்குத்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்கிற ரீதியில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணப்படம் நெட்பிளிக்ஸில் நவ. 18 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? - இயக்குநர் எஸ்.எஸ். குமரன்