நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக் கடலில், குறிப்பாக வட ஆந்திர பிரதேசம் மற்றும் தென் ஒடிஸா கடற்கரைப் பகுதிகளுக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. அது மேற்கே - வடமேற்கே நகா்ந்து வருவதாகவும், அடுத்த சில நாட்களில் கடலோரப் பகுதிகளில் கனமழையும், தமிழக வடகிழக்கு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காரைக்கால்...
இதுபோல தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. காரைக்கால் கடல் இயல்பான நிலையில் காணப்பட்டது. வெயில் தீவிரமாக உணரப்பட்டது.
