நாட்டுக்கோழிப்பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம்: ஆட்சியா்
தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம், செம்மறியாடு ,வெள்ளாடு பண்ணை, பன்றி வளா்ப்பு பண்ணை, வைக்கோல் ஊறுகாய்ப்புல், மொத்த கலப்பு உணவு தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடா்பான முழுமையான தகவல்களை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்கள் அறிய அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், அருகிலுள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலா்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை சென்னை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.