நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பல ஊர்களுக்குச் செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள், வங்கி உள்ளிட்ட முக்கிய இடங்கள் இப்பகுதியைச் சுற்றி அமைந்திருப்பதால் மாணவர்கள், முதியோர், நோயாளிகள், பொதுமக்கள் என பலர் வந்து செல்கின்றனர்.
ஆனால், நிழற்குடை இல்லாததால் வெயிலிலும் மழையிலும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக இப்பகுதியிலிருந்த பேருந்து நிழற்குடை இடிக்கப்பட்டது. அதன் பின் புதிய நிழற்குடை அமைக்கப்படாமல், பயணிகள் பாதுகாப்பற்ற நிலையில் நெடுஞ்சாலையோரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பகுதியில் முறையாக நிற்காமல் செல்வது வாடிக்கையாக இருந்தது.
“கூட்டம் இருந்தால் மட்டுமே பேருந்துகள் நிற்கின்றன. இரண்டு அல்லது மூன்று பேர் இருந்தால் பேருந்து நிற்காமல் சென்றுவிடுகிறது. மழையிலும், வெயிலிலும் நாங்கள் அல்லாடுகிறோம். நெடுஞ்சாலையோரம் நிற்பதால் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் பயந்து பயந்து பயணிக்கிறோம்,” என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
சமூக ஆர்வலர்களும் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “இந்தப் பகுதி முக்கிய வழித்தடத்தில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்,” என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நமது தரப்பில் இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளிடம் பேசி மே28-ம் தேதி " நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!" என்ற தலைப்பில் அவர்களின் சிரமங்களைச் சுட்டிக்காட்டி இருந்தோம்.
விகடன் செய்தி எதிரொலியாக, பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து களமிறங்கி புதிய பயணியர் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இனிமேல் மழை, வெயில் அல்லது எதாவது விபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாகச் செல்ல ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்த விகடனுக்கு மிகவும் நன்றி எனப் பொதுமக்கள் இன்முகத்துடன் கூறினர்.