Rain Alert: இரவில் கொட்டித் தீர்த்த மழை; இன்று மழை எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. போரூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, முகப்பேர், தியாகராயநகர், அரும்பாக்கம், கிண்டி, அடையாறு, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வட சென்னைக்குட்பட்ட ராயபுரம், மணலி, எண்ணூர், கொடுங்கையூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
திருமழிசை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பூந்தமல்லி, அயப்பாக்கம், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
ஆவடி பகுதிகளில் வானில் மின்னல் எனத் தோன்றியதால், இரவு வானம் பகல் போல் காட்சியளித்திருக்கிறது.

திருவொற்றியூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டி இருக்கும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.