நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை
நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த விஜய், செய்தியாளர்களை சந்தித்து, மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் தொண்டர்களுக்கு தனது அறிவுரையை வழங்கி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
திரைப்பட படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வரவிருக்கும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வருகையை முன்னிட்டு காலை முதலே விமான நிலைய வளாகத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.
அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையே அனுமதியின்றி சாலையில் பேரணியாகச் செல்லக் கூடாது என்று மதுரை காவல்துறை ஆணையர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், மதுரை மக்களுக்கு வணக்கம். உங்கள் அன்புக்கு கோடானு கோடி நன்றி. என் பணிக்காக நான் செல்கிறேன். நீங்கள் யாரும் காத்திருக்க வேண்டாம். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மதுரையில் தொண்டர்களை சந்தக்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
வேறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் அங்கிருந்து சென்றிருந்தாலும் கட்சித் தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் செய்தியாளர்களை சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பல மணி நேரமாக விஜய்யை வரவேற்கக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், தான் நடித்து வரும் ஜனநாயகன் பட வேலைக்காக மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்கிறேன். நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். யாரும் என்னை வாகனங்களில் பின்தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது மதுரை விமான நிலையப் பகுதியை 500க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் முற்றுகையிட்டு கோஷமிட்டு வருகிறார்கள். அவர்கள் தங்களை விமான நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கக் கோரி கோஷம் எழுப்பியும் வருகிறார்கள்.