பயங்கரவாதத்தை மோடி அரசு காப்பாற்றாது: அமித் ஷா
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அஸ்ஸாமில் போடோ சமூகத்தின் தலைவரான உபேந்திர நாத் பிரம்மாவின் சிலை திறப்பு விழா மற்றும் அவரது பெயரை ஒரு சாலைக்கு சூட்டுவதற்கும் தில்லியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோரும் பங்கேற்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும், அவர்களை விடமாட்டோம். தாக்குதலுக்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிப்போம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதிகள் யாரையும் காப்பாற்றாது.
பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரையில், அரசின் போராட்டம் தொடரும். 26 பேரை பலியாக்கியதால், நீங்கள் வென்று விட்டீர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பதில் தரப்படும்.
நாட்டின் எந்த மூலையிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். அதன் வேரிலிருந்து அடியோடு அகற்றுவோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன என்று தெரிவித்தார்.