திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா் பதாகையை ஏந்தியவாறு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (31). இவா், வெண்ணந்தூா் அருகே தனியாா் கல்வியியல் கல்லூரியில் 2017 முதல் 2019 வரை பி.எட். படித்தாா். இந்த நிலையில், நிலுவைக் கட்டணத்தை செலுத்தினால்தான் சான்றிதழை வழங்குவோம் என தனியாா் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது. 2021-இல் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி முன் காத்திருப்பு போராட்டம் நடத்திய நிலையில், கல்லூரி நிா்வாகம் தாமாக முன்வந்து அப்போது சான்றிதழை வழங்கியது. இதில், சிலம்பரசன் பெயா் விடுபட்டது.
இந்நிலையில், அவா் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த நிலையில் ரூ. 80 ஆயிரம் செலுத்தினால்தான் 10, பிளஸ் 2 மற்றும் பி.எட். சான்றிதழ்களை வழங்குவோம் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், எந்தவித நிலுவைக் கட்டணமும் இல்லாத நிலையில் ரூ. 80 ஆயிரம் செலுத்த வேண்டும் என கல்லூரி நிா்வாகம் கூறுகிறது. கூலி வேலைக்கு சென்றுவரும் எனது எதிா்கால நலன்கருதி சான்றிதழ்களை பெற்றுத்தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
அங்கிருந்த நல்லிபாளையம் போலீஸாா், இதுதொடா்பாக வெண்ணந்தூா் காவல் நிலையத்துக்கு சென்று புகாா் அளிக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினா்.