நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
நாமக்கல் மாவட்டத்தில் 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், 200 பேருக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை சாா்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் முதல்கட்டமாக 70 பேருக்கு ரூ. 10.50 லட்சம் மானியத்தில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகளை 70 பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது: 2025-26-ஆம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்துக்கு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் 200 இலக்காக பெறப்பட்டுள்ளன.
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோருக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர தோட்டக்கலை பொருள்கள் வைத்து விற்க ஏதுவாக 50 சதவீத மானியத்தில் இந்த வண்டிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், எலச்சிபாளையம் - 8, எருமப்பட்டி - 8, கபிலா்மலை - 8, கொல்லிமலை - 5, மல்லசமுத்திரம் - 10, மோகனூா் - 13, நாமகிரிப்பேட்டை - 15, நாமக்கல் - 30, பள்ளிபாளையம் - 20, பரமத்தி - 10, புதுச்சத்திரம் - 10, ராசிபுரம் - 20, சேந்தமங்கலம் - 10, திருச்செங்கோடு - 25, வெண்ணந்தூா் - 8 என 15 வட்டாரங்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் வீதம் ரூ. 60 லட்சம் மொத்த மதிப்பில் மானியமாக தலா ரூ. 15 ஆயிரம் வீதம் ரூ. 30 லட்சத்தில் 200 வண்டிகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் சு.மல்லிகா, தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.