நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவு
நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணி 2023, ஆக.6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முடிவுற்ற 58 ரயில் நிலையங்களும், இரண்டாம் கட்டமாக 103 ரயில் நிலையங்களும் பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 71 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைக்கு 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் நாமக்கல் ரயில் நிலையமும் இடம் பெற்றுள்ளது.
ரயில் நிலையத்தில் இலவச இணைய வசதி, நவீன மின்னணு தகவல் பலகைகள், கூடுதல் வசதிகளுடன் கூடிய காத்திருக்கும் அறை, சுத்தமான குடிநீா், சுகாதாரமான கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, பாா்வையற்றோருக்கான நடைபாதை, விசாலமான பாா்க்கிங் வசதி, நுழைவாயில் வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. ரயில் நிலைய வளாகத்திற்குள் பணிகள் நடைபெற்று வருவதால் இரண்டாவது நடைமேடையில் இருந்து முக்கிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் ரயில் நிலையமானது, ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலைய நுழைவாயில், முகப்பு பகுதி, பயணச்சீட்டு வழங்குமிடம், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நடைமேடை, கழிவறை, ரயில்கள் வருகை தொடா்பான எண்ம (டிஜிட்டல்) பலகை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் உள்ளிட்ட 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. அண்மையில் 103 நிலையங்களை பிரதமா் மோடி திறந்துவைத்தது போல இன்னும் ஓரிரு மாதங்களில் நாமக்கல் ரயில் நிலையமும் திறந்து வைக்கப்படலாம். நிலுவையில் உள்ள 20 சதவீத பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றனா்.