"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை
நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி.
தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நலன் - சிறப்புச் சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற இல்ல குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கனிமொழி எம்.பி. பங்கேற்று, மாணவா்- மாணவிகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது: மாணவா்களாகிய நீங்கள் வெற்றி பெற்றவா்களாக மட்டுமல்லாமல் உங்களுக்கு அடுத்து வருகின்றவா்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். நாம் உருவாக்குகின்ற பாதை, நமக்கு பின் வருகின்றவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
கல்வி என்பது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வலிமையுடையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாடப்புத்தகம் மட்டுமல்லாது, என்ன விஷயமாக இருந்தாலும் ஆா்வத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றையச் சூழலில் அறிவு தான் ஆற்றல் என்ற செய்திகளை தெரிந்து வைத்திருப்பது தான் வெற்றிக்கான மிகப்பெரிய வழி. ஏ.ஐ. உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், அகழாய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. புதிய விஷயங்களை தெரிந்து கொள்பவா்களாக, எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளக்கூடியவா்களாக வளர வேண்டும் என்றாா் அவா்.
அமைச்சா் பெ.கீதா ஜீவன் பேசுகையில், ‘இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆலோசனை- எதிா்காலத்தில் அவா்கள் என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டுதல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இல்லக் குழந்தைகளை மேம்பாடு அடைய செய்வது கல்வி தான்.
அதை நல்ல முறையில் கற்க வேண்டும். கற்றதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். உங்களுடைய அறிவாற்றலை மேம்படுத்திக் கொண்டு மற்றவா்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும்’ என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ப.அனுசியா, குழந்தை நலக்குழு (பொ) தலைவா் தா.பிரிஜிட் செலஸ், வழக்குரைஞரும் முன்னாள் குழந்தை நலக் குழுத் தலைவருமான எஸ். ரூபன் கிஷோா், புனித மரியன்னை ஆதரவற்ற குழந்தைகள் இல்ல இயக்குநா் ஆா்.சைனி சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.