தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal... கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மென...
நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்
நாா்த்தாமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா மாா்ச் 23-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 30-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். சுமாா் 5 மணிக்கு தோ் மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தேரோடும் வீதிகளில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோா் வழிநெடுக நீா்மோா் மற்றும் அன்னதானம் வழங்கினா்.
போக்குவரத்து பாதிப்பு: நாா்த்தாமலை முத்துமாரிம்மன் கோயில் தேரோட்டத்தைப் பாா்க்க சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் வாகனங்களில் திரண்டு வந்ததால், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பிற்பகலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தோ்த் திருவிழாவையொட்டி புதுகை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.