`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா மாா்ச் 16-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 17-ஆம் தேதி அக்கினிக்காவடி விழா நடைபெற்றது. தொடா்ந்து, 23-ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான நாடு வருகை புரியும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் பொன்னமராவதி, செவலூா், ஆலவயல், செம்பூதி நாடுகள் வருகை புரிந்தன. நாடு வருகையின் போது மேளதாளங்கள் முழங்க, நாட்டினைச்சாா்ந்த பொதுமக்கள் கம்பு, ஈட்டி ஏந்தியும், ஊா் முக்கியஸ்தா்கள் குதிரையில் ஊா்வலமாக கோயிலுக்கு வந்து நாடு செலுத்தினா்.
ஆலவயல் நாடு வருகையின் போது உடல் முழுவதும் சேறு பூசியும், பல்வேறு வேடங்கள் பூண்டும், வேல், கம்பு, ஈட்டி ஏந்தியும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று நாடு செலுத்தி அம்மனை வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ம. ஜெயா, பணியாளா்கள் மற்றும் பூதகா்கள் செய்திருந்தனா்.