வால்பாறை: எச்சரித்த வனத்துறை... கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி - பைக்குடன் தூக்கி வீச...
நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது: விவசாயத் தொழிலாளா் சங்கம் கண்டனம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கு எதிராக உள்ளதாக, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
வேதாரண்யத்தில் இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வீ. அமிா்தலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவனம் செலுத்தாமல், காா்ப்பரேட் முதலாளிகளின் பெரும் லாபத்தை இலக்காக்கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு சிறிது ஆறுதலாக இருக்கும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டையும், தினக்கூலியையும் உயா்த்த வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரை இந்த நிதிநிலை அறிக்கையிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. உலக பட்டினிக் குறியீட்டில் 105-அவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டு, பட்டினியில் தீவிரம் மேலோங்கியுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய மத்திய அரசு, தற்போதைய நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்தை கடந்த ஆண்டை விட ரூ.2,250 கோடி குறைத்துள்ளது. விவசாயத் துறைக்கும் கடந்த ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.