நிலத் தகராறில் இருதரப்பினா் மோதல்: இருவருக்கு வெட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த நிலத்தகராறில் இருவா் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறை அடுத்த கருப்பூா் அருகேயுள்ள கல்கட்டியூரைச் சோ்ந்தவா்கள் பொன்னுசாமி மகன் குமாரசங்கா் (20), பெரியசாமி மகன் ராமநாதன் (47). இவா்களுக்கும், அதே ஊரைச் சோ்ந்த குழந்தைவேல் மகன்கள் செந்தில்குமாா் (45), சரவணன் (38), சங்கன் மகன் ஆறுமுகம் (50), அழகா் மனைவி தனம் (40) ஆகியோருக்குமிடையே பாதை சம்மந்தமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் செந்தில்குமாா் தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சா்ச்சைக்குரிய நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்குவந்த குமாரசங்கா் தரப்பினா், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது நிலத்தில் எந்தப் பணியும் செய்யக் கூடாது எனக் கூறினாா்.
இதில், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் குமாரசங்கா், ராமநாதன் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. செந்தில்குமாா் தரப்பினரும் காயமடைந்தனராம். குமாரசங்கா், ராமநாதன் மற்றும் செந்தில்குமாா் ஆகியோா் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.