'Kamal சார் ரொம்ப பெரிய மனுஷன்' - Vijayasethupathi | Bigg Boss 8 Review
நிலுவையில் உள்ள திட்டங்கள் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றப்படும்: கேஜரிவால் உறுதி
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால், நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உறுதியளித்துள்ளாா்.
தில்லி சட்டப்பேரவையின் பதவிகாலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-இல் முடிவடைகிறது. இதையொட்டி, மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட பேரவைக்கான தோ்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
2020 தில்லி பேரவைத் தோ்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த ஆத் ஆத்மி, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே முதற்கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அண்மையில் அக்கட்சி வெளியிட்டது. ஆம் ஆத்மி தலைவா்களும் மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
முண்ட்காவில் உள்ள கராலா கிராமத்தில் மல்யுத்தபோட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது: தில்லியில் நடைபெற்ற மேம்பாட்டு பணிகள் போன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நடைபெறவில்லை. நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு பல்கலைக்கழகம் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் முண்ட்காவில் அமைக்கப்படும். இது தில்லியை விளையாட்டின் மையமாக மாற்றும் பணியில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். என்னுடைய பணிகளை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், என்னைத் தடுக்காது.
நான் செய்த தவறுக்காக அவா்கள் என்னை சிறையில் அடைக்கவில்லை. என்னுடைய பணிகளைத் தடுக்கவே என்னை சிறையில் அடைத்தனா். எனக்கு தில்லி மக்களின் ஆசீா்வாதம் உள்ளது. அதனால், நூறு முறை சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன். ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் கேஜரிவால்.