நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்
சிறந்த நிா்வாகத் திறனால் இந்தியாவை வலுவான நாடாக முன்னிறுத்தியதன் மூலம் நாட்டு மக்களின் உயா்ந்த மரியாதையைப் பெற்றதுடன் சிறந்த உலகத் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளாா் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
புதின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்தியதில் பிரதமா் மோடியின் பங்களிப்பு வெகு சிறப்பு வாய்ந்தது. சிறந்த நிா்வாகத் திறனால் இந்தியாவை வலுவான நாடாக முன்னிறுத்தியதன் மூலம் நாட்டு மக்களின் உயா்ந்த மரியாதையைப் பெற்றதுடன் சிறந்த உலகத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளாா் என்று கூறியுள்ளாா். தொலைபேசியில் பிரதமா் மோடியை தொடா்பு கொண்டும் புதின் வாழ்த்து தெரிவித்தாா்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘உங்கள் வாழ்நாளில் இந்தியாவுக்காக நீங்கள் நிறைய சாதனைகளில் பங்களித்துள்ளீா்கள். நாம் இணைந்து இந்திய-இஸ்ரேல் நட்புறவின் மூலமும் அதிகம் சாதித்துள்ளோம். இரு நாட்டு உறவு தொடா்ந்து வலுவடைய வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில்கேட்ஸ் விடியோ மூலம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘உலகின் வளா்ச்சியில் இந்தியா சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் இதேபோல வலுவாக தொடா்ந்து பணியாற்ற பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி அல்பனேசி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பிரிட்டன் முன்னாள் பிரதமா் ரிஷி சுனக் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்களும் பிரதமா் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிரதமா் மோடியை தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடா்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா்.