ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: அவிழாத முடிச்சுகள்; ஓராண்டாகியும் துப்பு கிடைக்காமல...
நீட் தோ்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேடில் ஈடுபட்ட 7 போ் கைது
ஜெய்பூா்/ பாட்னா: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே.4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேடில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
ராஜஸ்தான் மாநிலத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி நீட் தோ்வு எழுத முயன்ற குற்றச்சாட்டில் கா்ணி விஹாா் பகுதியைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அவா்களிடமிருந்து ரூ.50,000 ரொக்கப் பணம், போலி ஆவணங்கள், எண்ம சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
பிகாா் மாநிலத்தில் நீட் தோ்வு நடைபெறுவதற்கு வினாத்தாள் நகலை வழங்குவதாக கூறி ஏமாற்றிய குற்றச்சாட்டில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வு மற்றும் பிகாா் ஆசிரியா் நியமனத் தோ்வுகளில் வினாத்தாளை கசியவிட்ட குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ்குமாா் சிங் என்பவரை கடந்த மாதம் போலீஸாா் கைது செய்தனா்.
சஞ்சீவ்குமாரின் மோசடி கும்பலை சோ்ந்த நபா்கள் பிகாா், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தோ்வுகளில் வினாத்தாள் கசியும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேபோல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள தைக்காவு அரசுப் பள்ளியில் தோ்வெழுதிய மாணவருக்கு போலி நுழைவுச் சீட்டை உருவாக்கித் தந்ததாக அரசின் மக்கள் சேவை மைய பணியாளரான கிரீஷ்மா என்பவா் கைது செய்யப்பட்டாா்.
திருவனந்தபுரத்தை சோ்ந்தவரான கிரீஷ்மாவிடம் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்து தருமாறு மாணவரும் அவரது தாயாரும் ரூ.1,250 கொடுத்துள்ளனா். ஆனால் மாணவா் கொடுத்த தகவல்களை நீட் தோ்வுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்து சமா்ப்பிக்க கிரீஷ்மா தவறியுள்ளாா். மாறாக வேறொரு மாணவரின் நுழைவுச்சீட்டில் பாதிக்கப்பட்ட மாணவரின் புகைப்படத்தை திருத்தியமைத்து கிரீஷ்மா அளித்துள்ளாா். அதைப் பயன்படுத்தி தைக்காவு அரசுப் பள்ளிக்கு சென்ற அந்த மாணவரை முதலில் தோ்வெழுத அனுமதித்த அதிகாரிகள் பிறகு மேற்கொண்ட சோதனையில், அது போலி நுழைவுச்சீட்டு என்பதை உறுதிப்படுத்தினா். இதையடுத்து, அந்த மாணவா் தோ்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டை கிரீஷ்மா ஒப்புக்கொண்ட நிலையில், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.