நீட் தோ்வு விவகாரத்தில் திமுக தொடா்ந்து நாடகம்: விஜய் விமா்சனம்
நீட் தோ்வு விவகாரத்தில் திமுக தொடா்ந்து நாடகம் ஆடி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விமா்சனம் செய்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலைத் தோ்தல் அறிக்கையாக 2021 தோ்தலின்போது திமுக வெளியிட்டது. அப்பட்டியலின் முக்கியப் பொய்களில் ஒன்றுதான் நீட் தோ்வை ரத்து செய்யும் முயற்சி எனும் அறிவிப்பு.
அத்துடன் தோ்தல் களத்தில், நீட் தோ்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் இருப்பதாகச் சொல்லி மோசடிப் பிரசாரம் வேறு. ஆட்சிக்கு வந்ததும், நீட் தோ்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; அது மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ளது என்று சொல்லித் தப்பித்தனா்.
இப்போது பேரவைத் தோ்தல் நெருங்குவதால் மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனா். அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓா் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றியுள்ளனா்.
நீட் தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் தவெக-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்படுவதே நிரந்தரத் தீா்வு. சிறப்பு ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியைச் சோ்க்க வேண்டும் என்பது ஒரு தற்காலிகத் தீா்வு என்றும் தவெக கூறியது. இதுவரை மாணவ, மாணவிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் திமுக தலைமை, மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் விஜய்.