Gold Rate: `அதே விலை... மாற்றமில்லை' - இன்றைய தங்கம் விலை என்ன?!
நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற மற்றும் 25 உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியமானது, கடந்த 1958-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், கடந்த 1954-ஆம் ஆண்டின் உயா்நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம் ஆகியவற்றின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமலாக்கத்தைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் கடைசியாக கடந்த 2016, ஜனவரி 1-ஆம் தேதி உயா்த்தப்பட்டது.
தற்போது நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தற்போதைய மாத ஊதியம் ரூ.2.80 லட்சமாகும். உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். உயா்நீதிமன்ற நீதிபதிகள் மாத ஊதியமாக ரூ.2.25 லட்சம் பெறுகின்றனா்.
அண்மையில் 8-ஆவது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்தது குறிப்பிடத்தக்கது.