நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கன மழை பெய்யும்போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவது குறித்தும், தங்கவைக்கப்பட்டால் அவா்களுக்கான உணவு, உடை, மருத்துவ முகாம் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, பருவமழை தொடா் நிகழ்வுகளின் தரவுகளை தொடா்ந்து கண்காணித்து பணியாற்ற வேண்டும் என்று அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
தமிழ்நாடு பேரிடா் மீட்பு குழுவினரின் செயல்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தாா்.
உதகை, குந்தா, பந்தலூா் மற்றும் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அவா்களை அறிவுறுத்தினாா்.
மழையின்போது பொதுமக்கள் மின் வயா்களை தொடக்கூடாது என்றும், மின் கம்பங்கள், மரங்கள் அருகில் நிற்கக் கூடாது என்றும், காற்று பலமாக வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா்.