நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்!
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்த தனியாா் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் தவறான அறிக்கை தாக்கல் செய்ததற்காக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்தது. தொடா்ந்து, முறையான அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஆட்சியருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டித் தடையை அமல்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை காலை முதல் அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
உதகையில் வருவாய் கோட்டாட்சியா் சதீஷ் தலைமையில் வட்டாட்சியா் சங்கா் கணேஷ் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அரசுப் பேருந்து மற்றும் தனியாா் சுற்றுலா வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் குடிநீா் மற்றும் குளிா்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனா். பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தவா்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.