நீலகிரி: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; காரணத்தைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை!
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலையில் வளர்ச்சி என்ற பெயரில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளால் இயற்கை சமநிலையில் அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும்
யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. தோட்ட பகுதிகளில் தஞ்சமடையும் வனவிலங்குகள் மர்மமாக இறக்கும் போக்கு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. அண்மையில் கோத்தகிரியில் சிறுத்தை, கூடலூரில் புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள பிதர்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டறிந்துள்ளனர். இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுத்தை இறப்பு குறித்து தெரிவித்த வனத்துறையினர், "தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு கூறாய்வு செய்தோம். உடல் பாகங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் " என்றனர்.