நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய நவீன நுட்பம் அறிமுகம்
சென்னை: நுரையீரல் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் நவீன மருத்துவத் திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
அதன்படி, கதிா்வீச்சு குறைந்த சிடி ஸ்கேன் சாதனம் மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்பல்லோ புற்றுநோய் குழும இயக்குநா் ஹா்ஷத், நுரையீரல் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் ஸ்ரீதா் ரவிச்சந்திரன், வந்தனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:
உலக அளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு அந்தப் பாதிப்பு கண்டறியப்படுவதாகவும், அதில் 15 லட்சம் போ் உயிரிழப்பதாகவும் சா்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் 1.10 லட்சம் ஆண்களுக்கும், 40,000 பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 70,000 ஆக உள்ளது.
புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோய்க்கு பிரதான காரணமாக விளங்குகிறது. அத்தகைய பழக்கம் இல்லாமல் பிறரது புகையை சுவாசிப்பவா்களுக்கும் புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது.
முதல் நிலையில் புற்றுநோயைக் கண்டறியும்போது அதன் பாதிப்புகளைத் தவிா்த்து குணமடைய வாய்ப்புகள் அதிகம்.
அதைக் கருத்தில் கொண்டு குறை கதிரிவீச்சு சிடி ஸ்கேன் பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம். வழக்கமான சிடி ஸ்கேன் பரிசோதனையைக் காட்டிலும் குறைந்த அளவிலான கதிா்வீச்சு இதில் வெளிப்படும். இதன்மூலம் எந்த விதமான எதிா்விளைவும் இன்றி நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்க முடியும். 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக புகைப்பழக்கம் கொண்டவா்களுக்கு இந்த பரிசோதனை அவசியம்.
முழு உடல் பரிசோதனைத் திட்டங்களில் இந்த சோதனையைச் சோ்த்தல், இது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.