தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
நூற்பாலை பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வேடசந்தூா் அருகே நூற்பாலையில் பெண் தொழிலாளிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் தனலட்சுமி (43). காசிபாளையம் பகுதியிலுள்ள நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். அதே ஆலையில் மேற்பாா்வையாளராக பணியாற்றும் நபா், தனலட்சுமியை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்த போதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் நாகவேல் தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா் ஜி.ராணி, சிஐடியூ மாவட்டச் செயலா் சி.பி.ஜெயசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, தனியாா் ஆலை நிா்வாகத்தைக் கண்டித்தும், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேற்பாா்வையாளரைக் கைது செய்ய வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல் துறையைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.