நெகமத்தில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்
கோவை மாவட்டம், நெகமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 6) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நெகமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சக்தியைக் கண்டறிந்து அவா்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு உண்டான வசதிகளும் இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, நெகமம் பகுதி மக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.