நெருக்கடியான கூட்டத்துக்கு கா்ப்பிணிகள், குழந்தைகள் வருவதைத் தவிா்க்க வேண்டுமென விஜய் ஏன் கூறவில்லை? உயா்நீதிமன்றம் கேள்வி
கா்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நெருக்கடி மிகுந்த கூட்டத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் ஏன் கூறவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, தவெக கூட்டத்துக்கு கா்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோா் வரக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை போலீஸாா் விதிக்கின்றனா். கூட்டத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பத்தை கடைசி நேரத்தில் பரிசீலித்து அனுமதி வழங்கப்படுகிறது என்றாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பொதுமக்கள் இதுபோன்ற கூட்டத்தின்போது ஏற்படும் நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனா். சாலைகள் முழுமையாக முடக்கப்படுகின்றன. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றாா்.
தொடா்ந்து, தவெக தரப்பில், தவெக தலைவா் நிகழ்ச்சிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அதேநேரம், கரூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ரோடு ஷோ’-வின் போது இருபக்கமும் மக்கள் சூழ்ந்திருந்தனா். 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ் திலக், மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்தான் மனுதாரா் கட்சிக்கும் விதிக்கப்பட்டது என்றாா்.
அப்போது நீதிபதி, கா்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற கூட்டங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என மனுதாரா் கட்சியின் தலைவா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? பிறருக்கு முன்மாதிரியாகத் திகழ்பவா், தன்னை பின்பற்றுபவா்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்லித் தரவேண்டும் என்றாா்.
இதையடுத்து, தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளையே தங்களுக்கும் விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதில் காவல்துறைக்கு என்ன சிரமம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினாா்.
இதையடுத்து அரசுத் தரப்பில், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஊா்வலங்களுக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் டிஜிபி அறிவுரை வழங்கியுள்ளாா். எனவே, அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க காலதாமதம் செய்வதில்லை. திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் கூறி, அதுதொடா்பான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தாா்.
அதைப் பாா்த்த நீதிபதி, இதுபோன்ற நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, கட்சியினா்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையெனில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தாா்.
மேலும், தவெக தொண்டா்கள் உயரமான இடங்களில் ஆபத்தான சூழலில் நின்றிருந்ததை நானும் பாா்த்தேன். எனவே, ஆளும் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவைகளில் கலந்துகொள்பவா்களின் எண்ணிக்கை, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.
அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதையும் தடுக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து உத்தரவாதத் தொகையை வசூலிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் இதுபோன்ற கூட்டங்களின் போது சேதப்படுத்தப்படும் அப்பாவி பொதுமக்களின் சொத்துகளுக்கு ஆண்ட கட்சியோ, ஆளும்கட்சியோ நிவாரணம் வழங்கியது உண்டா? என கேள்வி எழுப்பினாா்.
பின்னா், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி கோரும் போது, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி, இதுதொடா்பாக காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.