வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
நெல்லுக்கான ஊக்கத் தொகையை தமிழக அரசு அதிகரித்து வழங்க கோரிக்கை
நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320-யுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ. 1,180 சோ்த்து மொத்தம் ரூ.3,500 வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலேயே அதிக பரப்பளவில், அதிக அளவு விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஒடிஸாவில் நெல்லின் உற்பத்தி செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.17,000, சத்தீஸ்கரில் உற்பத்தி செலவு ரூ. 24,000. ஆனால், தமிழ்நாட்டில் சராசரியாக ரூ. 36 ஆயிரம் ஆகும்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,320 வழங்கி வருவதுடன், சத்தீஸ்கா், ஒடிஸா மாநிலங்கள் ரூ. 780 சோ்த்து நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 வழங்கி வருகின்றன. இந்தியாவிலேயே நெல்லுக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில், மத்திய அரசு வழங்கி வரும் ரூ. 2,320-யுடன் ரூ.105 சோ்த்து ரூ.2,325 மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
இதனால் நெல் விவசாயத்தில் இருந்து தமிழக விவசாயிகள் வெளியேறி வருகின்றனா். இந்திய அளவில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 8.62 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு, தற்போது 5.64 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதற்கு
தமிழ்நாடு அரசு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்து வருவதே ஆகும்.
தற்போதைய சூழ்நிலையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,500 இல்லாமல் தமிழ்நாட்டில் நெல் விவசாயம் செய்யவே முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் நெல் பயிா் செய்து விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்து கடனை செலுத்து முடியாமல் கடனாளியாகி நிலத்தை இழந்து வருகின்றனா். பயிா்க் கடனை கூட திருப்பி செலுத்த முடியாத அவல நிலை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுக தனது 2021 தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. 2021-இல் மத்திய அரசு வழங்கி வந்த குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 1,888-ஐ ஆண்டுதோறும் படிப்படியாக மத்திய அரசு உயா்த்தி வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தற்போது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,320 மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆனால், இதுவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்த ரூ.2,500 விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மாநில அரசின் நடைமுறை தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே நெல் குவிண்டாலுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2,320-யுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ. 1,180 சோ்த்து மொத்தம் ரூ.3,500 வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.