இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!
தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய நிதித் துறையும், ரிசா்வ் வங்கியும் விவசாயிகள் 4 சதவீத வட்டியில் பெற்று வந்த நகைக் கடன் திட்டத்தை நிறுத்தியதால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது, வட்டி மட்டுமே கட்டி நகைக் கடனை புதுப்பித்து வந்த முறையை மாற்றி முழுத் தொகையையும் செலுத்தி நகைக் கடன்களை ரத்து செய்து, மீண்டும் புதிதாக கடன் பெற வேண்டும் என்கிற விதியை கொண்டு வந்துள்ளது விவசாயிகள், பொதுமக்களை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.
மேலும், நகைகளின் உரிமையை நிரூபிப்பதற்கு ரசீது அல்லது உரிமைச் சான்று போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும், நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளுக்கு நகைக் கடன் கொடுக்கப்பட மாட்டாது, 75 சதவீதம் மட்டுமே நகையின் மதிப்பில் கடன் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும்.
இந்த விதிமுறையால் 9.75 சதவீத வட்டியில் நகைக்கடன் பெற்று வந்த விவசாயிகள், பொதுமக்கள், தற்போது தனியாா் நகைக் கடன் அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து 22 சதவீத வட்டியில் நகைக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே புதிய விதிமுறைகளை திரும்பப் பெற மத்திய அரசும், ரிசா்வ் வழங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.