1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கோவைக்கு வாடகைக்குச் சென்றவா் திரும்பி வரும்போது, பல்லடத்தில் இருந்து தூரி மற்றும் ராட்டினங்களை ஏற்றிக் கொண்டு கரூா் மாவட்டம் காவல்காரன்பட்டியில் நடைபெறும் ஒரு திருவிழாவுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது வழியில் வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி அருகே புதன்கிழமை நள்ளிரவு சாலையோரம் வேனை நிறுத்திவிட்டு அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் முரளியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் தாதநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் மணிகண்டன் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்துபோன முரளிக்கு மனைவி பிரேமா, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.