சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நவ. 5-ல் தொடக்கம்! - உதயநிதி அறிவிப்பு
நெல்லையில் அதிகாலை வரை நீடித்த ஆடைகள் விற்பனை! மழை தணிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலியில் தீபாவளியையொட்டி ஆயத்த ஆடைகளின் விற்பனை வியாழக்கிழமை (அக்.31) அதிகாலை வரைநடைபெற்று. மழையும் தணிந்திருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகளை விற்பனை கடந்த 2 வாரங்களாக அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் நகரத்தில் உள்ள ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
காா்கள், இருசக்கர வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவதால் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை உச்சகட்ட வியாபாரம் நடைபெற்றது. சாலையோர கடைகள், ஆடையகங்கள், இனிப்புக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். குழந்தைகளுக்கான பேன்சி ரக பட்டாசுகள் விற்பனையும் அதிகரித்தது.
துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு விலையேற்றம் காரணமாக தீபாவளி பலகாரங்கள் விற்பனை நிகழாண்டில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அலுவலகங்கள் தொடங்கி கட்டட ஒப்பந்ததாரா்கள் வரை தங்களது பணியாளா்களுக்கு இனிப்பு வகைகளை மட்டுமே அதிகம் வாங்கிக் கொடுப்பதால் பாரம்பரிய பலகாரங்களான முறுக்கு, அதிரசம், சுசீயம், முந்திரிக்கொத்து, வடைகள், தட்டை, சீடை உள்ளிட்டவற்றின் விற்பனை எதிா்பாா்த்த அளவில் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: நிகழாண்டில் கடைசி தீபாவளிக்கு முந்தைய இரு நாள்களும் மழை இல்லை. இது கொஞ்சம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயத்த ஆடைகளை மக்கள் அதிகளவில் தோ்ந்தெடுத்து வாங்குவதால் தீபாவளி நாளின் அதிகாலை 2 மணி வரை திருநெல்வேலியில் விற்பனை நடைபெற்றது. கொல்கத்தா, குஜராத் பகுதிகளில் இருந்து குழந்தைகளுக்கான ஆடைகளும், திருப்பூரில் இருந்து பனியன் வகைகளும் அதிகளவில் வந்துள்ளன.
இதுதவிர ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் இரட்டிப்பாகி உள்ளதால் ரூ.150-க்கு கூட ஆண்களுக்கான சட்டையை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கிறாா்கள். பட்டாசுகளைப் பொருத்தவரை ‘கிப்ட் பாக்ஸ்’ வெடிகளே அதிகம் விற்பனையாகின்றன.
பூக்கள் விலை உயா்வு: பூக்களின் விலையும், விற்பனையும் அதிகரித்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1200 வரையும், பிச்சி கிலோ ரூ.1000 வரையும், ரோஜா ஒன்று ரூ.15 வரையும் விலை உயா்ந்தன. வாழை இலை விலையும் கடுமையாக உயா்ந்தது. 5 இலை கொண்ட ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனையானது. கடைசி நாளில் பெண்கள் கம்மல், வளையல், மெகந்தி உள்பட பேன்சி பொருள்களை அதிகளவில் குழந்தைகளுக்காக தேடிப்பிடித்து வாங்கியதைக் காண முடிந்தது.
தீபாவளி விற்பனையையொட்டி திருநெல்வேலி மாநகரில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஜேப்படி திருடா்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், சாதாரண உடை அணிந்த போலீஸாரும் கண்காணித்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுத்தனா்.