நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது!
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி தச்சநல்லூா் கணபதி மில் காலனியை சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் ராஜ்குமாா் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா், தச்சநல்லூா் பகுதியில் உள்ள மாணவா்களை மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு சவாரிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவ-மாணவிகளை பள்ளியிலிருந்து மாலையில் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்றபோது அந்த மாணவிக்கு ராஜ்குமாா் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த மாணவியின் உறவினா்கள், ராஜ்குமாரை தாக்கியதுடன், அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற தச்சநல்லூா் போலீஸாா், ராஜ்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
ராஜ்குமாா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.
அதேநேரத்தில் தன்னை தாக்கியதாக ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் 7 போ் மீது தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.